நடிகர் - நடிகை, இயக்குனர்களுக்கு சம்பளத்தில் வெட்டு.. தயாரிப்பாளர்கள் முடிவு..!

0 12258

கொரோனா ஊரடங்கால் தமிழ்த் திரையுலகினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்- நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் முதலில் வருமா? இல்ல சூரரை போற்று முதலில் வருமா..? வலிமைக்கு போட்டியாக அருவா வருமா இல்லை கோப்ரா வருமா, அண்ணாத்த எப்படியாவது வருவாரா? என்றும் திரையுலகினரும் ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், அழையா விருந்தாளியாக நாட்டுக்குள் புகுந்து நம்மை வீட்டுக்குள் முடங்க வைத்திருக்கின்றது கொரோனா..!

கிருமிகளிலேயே மருந்துக்குக் கட்டுப்படாத மாஸ்கிருமியாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் தொடங்கி உள்ளூர் வரை அச்சத்தில் வாயை மூடி, கையைக் கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்த் திரையுலக மாஸ் ஹீரோக்களின் சத்தத்தை மட்டுமல்ல, சம்பளத்தையும் கட் செய்ய வழி செய்து கொடுத்துள்ளது கொரோனா எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், சூர்யா 10 லட்சமும், சிவகார்த்திகேயன் 10 லட்சமும், விஜய் சேதுபதி 10 லட்சமும் அள்ளிக் கொடுத்த நிலையில், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு என்று நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் ரூபாய் வழங்கி, தான் நிஜத்திலும் ஹீரோ என்பதை நிரூபித்து உள்ளார்..!

அதே நேரத்தில் தயாரிப்பாளர்களையே வரிகட்ட செய்து படத்திற்கு 50 கோடியில் இருந்து 80 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கூட இதுவரை அள்ளி மட்டுமல்ல, கிள்ளிக்கூட கொடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இத்தகைய ஸ்டார்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் கைவைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகர்கள் மட்டுமல்லாமல், கோடிகளில் சம்பளம் பெறும் நயன்தாரா போன்ற நடிகைகள், ஏ.ஆர் ரஹ்மான், அனிருத், இமான் போன்ற இசை அமைப்பாளர்கள், கோடிகளை வாரிக் குவிக்கும் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி போன்ற இயக்குனர்களின் சம்பளத்திலும் 30 சதவீதம் வரை குறைத்து வழங்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசித்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு திரைப்படங்களுக்கு பைனான்சியர்களிடம் பெற்ற கடனுக்குரிய வட்டியையும் 3 மாதங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சில தயாரிப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு நிலைமை சீரடைந்த பின்னர் ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த படங்களுக்கும், சிறிய படங்களின் வெளியீட்டுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கவும், முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் அதன் பின்னரே வெளியிடப்படவேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பல கோடி மக்கள் செலுத்தும் சினிமா டிக்கெட் கட்டணத்தால், எந்த ஒரு வணிக இழப்பும் இன்றி கோடிக்கணக்கான ரூபாயை சம்பளமாக பெற்று, படத்தில் 10-வது வள்ளல் போலவும், மக்களுக்கு உதவுவதில் கர்ணன் போலவும் காட்டிக் கொள்ளும் தமிழக மாஸ் ஹீரோக்களின் முகமூடி தற்போது மெல்ல கிழியத் தொடங்கியுள்ளது..!

இந்தி மற்றும் தெலுங்கு ஹீரோக்கள் பிரதமர் நிவாரண நிதிக்கும், அந்தந்த மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கும் கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் கூட, தங்களை வெற்றி நாயகர்களாக்கிய மக்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் இல்லாமல் பணத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு உறங்கும் திரையுலக கோடீஸ்வர நடிகர்களுக்கு சம்பளத்தை பாதியாகக் குறைத்தாலும்கூட அவர்கள் கவலை கொள்ளப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments