EMI கட்டணுமா? வேண்டாமா? அதிர்ச்சியூட்டிய குறுந்தகவல்..?
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பெற்ற எல்லாவிதமான கடன்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், எச்.டி.எப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து இ.எம்.ஐ.எடுப்பதற்கான முன் அழைப்பு குறுந்தகவலை அனுப்பி அதிர்ச்சியூட்டி வருகின்றது
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு , 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் மார்ச் மாதம் பலரது தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் முழுமையாக முடங்கின. இதனால் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள் என பலரும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து வங்கிகளில் தாங்கள் பெற்ற கடனுக்கு எப்படி இ.எம்.ஐ. கட்ட போகிறோம் ? என்ற தவிப்பில் இருந்த மக்களுக்கு ஆறுதலான தகவலை மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். அதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற வீட்டுக்கடன், தனி நபர்கடன், வாகனக் கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் என எல்லாவிதமான கடன்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் மாதத்தின் கடைசி நாளான 31ந்தேதி எச்.டி.எப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான இ.எம்.ஐ செலுத்த கணக்கில் பணத்தை இருப்பு வைத்திருங்கள் என்று முன்கூட்டியே குறுந்தகவல் அனுப்ப தொடங்கி உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மாதத்தில் முதல் நாளில் இ.எம்.ஐ கட்டும் நிலையில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியை அழைத்து பேசினால், தங்களுக்கு ரிசர்வ் வங்கி எழுத்துப் பூர்வமான உத்தரவு எதையும் வழங்கவில்லை என்றும், ஒரு வேளை அவர்களிடம் இருந்து அப்படி ஏதாவது உத்தரவு வந்தால் இ.எம்.ஐ யை நிறுத்தி வைப்பது குறித்து யோசிப்போம் என்றும் பதில் அளித்துள்ளனர்.
இதில், வருகிற 5 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி இ.எம்.ஐ செலுத்த வேண்டிய நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூட இந்த முறை 31 ந்தேதியே அலர்ட் தகவல் அனுப்பி வரும் எச்.டி.எப்.சி வங்கியின் செயல்பாடு ரிசர்வ் வங்கியாவது... ஆர்டராவது என்பது போல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். gfx out
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியே அறிவிப்பை மதிக்கவில்லையெனில் சுய உதவி குழுக்களுக்கு கடன்வழங்கியுள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ன செய்ய போகிறார்களோ என்ற பதை பதைப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. தனியார் வங்கிகளுக்கு விரைவாக எழுத்துப்பூர்வ உத்தரவை அனுப்பி இ.எம்.ஐ விலக்கு அளிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments