கொரோனா உறுதி எதிரொலி... காவல் வளையத்தில் நெல்லை மேலப்பாளையம்...!
கொரோனா பாதிப்பு எதிரொலியாக, திருநெல்வேலி ஆட்சியரின் உத்தரவின் பேரில், மேலப்பாளையம் பகுதி முழுவதும் மூடப்பட்டு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லியில் இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களில், திருநெல்வேலியைச் சேர்ந்த 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 22 பேரில், 15க்கும் மேற்பட்டவர்கள் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிற பகுதிகளில் இருந்து மேலப்பாளையம் செல்லும் அனைத்து சாலைகள் , வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தீவிரமாக கண்காணிக்க, காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், அந்ததந்த தெரு முனைகளிலேயே பலசரக்கு, காய்கறிகள் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனங்களிலும் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு செல்வோர், அதுவும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் நடந்து சென்று வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையத்தில் வசிப்பவர்கள் யாரும் வெளியில் வரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநபர்கள் யாரும் மேலப்பாளையத்திற்குள் செல்லக் கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மேலப்பாளையம் செல்லும் அனைத்துப் பகுதிகளும் அடைக்கப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 36 அறைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் கொரோனா பாதிப்பு தடுப்பு மருத்துவமனை ஒன்றையும் அமைத்துள்ளனர்.
Comments