மூன்றடுக்கு முகக்கவசம்.. தரமான சானிடைசர்.... தையல் பணிகளில் பெண் காவலர்கள்..!

0 3663

தையல் பயிற்சி பெற்ற பெண் காவலர்களை கொண்டு 60 ஆயிரம் முகக் கவசங்கள் மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் ஆயிரம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை காவலர்கள் களமிறங்கியுள்ளனர்.

கொரோனா வேகமாக பரவி வருவதால், தற்காப்புக்கு பயன்படும் முகக் கவசத்திற்கும், சானிடைசர் எனும் கிருமி நாசினிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாப நோக்கத்திற்காக தரமற்ற முகக் கவசங்களும், சானிடைசர்களும் விற்கப்பட்டு வருகிறது.

இதனால் சுகாதார பணிகள், பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை சார்பில் முக கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முகக் கவசம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான நான் ஊவன் பேப்ரிக் (Non woven fabric) மற்றும் மெல்போன் பேப்ரிக் (meltblown fabric) கொள்முதல் செய்து பெண் காவலர்கள் மூலம் தயாரித்து வருகின்றனர். இதற்காக ஆயுதப் படை பிரிவில் தையல் கலை தெரிந்த 30 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, காவலர் குடும்பத்தினரின் வீட்டில் இருந்த தையல் எந்திரங்களை பெற்று முக கவசம் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மூலப்பொருட்கள் வாங்கினால் 60 ஆயிரம் முக கவசம் தயாரிக்கலாம் எனவும், 1.50 காசுகளுக்கு ஒரு முக கவசம் தயாரிக்கப்படுவதால் அரசு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். அதே வேளையில் மூன்று அடுக்குகளை கொண்ட தரமான முக கவசமாக, நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் முக கவசங்கள் வரை தயாரித்து வழங்குகின்றனர். பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினருக்கு மட்டுமல்லாது மற்ற துறை ஊழியர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல் மருந்தியல் துறை நிபுணர்கள் உதவியுடன் முதற்கட்டமாக ஆயிரம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி Isopropyl alcohol, Hydrogen Peroxide மற்றும் Glycerol ஆகியவற்றின் மூலம் தரமான சானிடைசர்கள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக காவல் துறையில் வேதியியல் படித்த காவலர்களுக்கு மருந்தியல் துறை நிபுணர்கள் பயிற்சியளித்தனர்.

பணியில் உள்ள ஒவ்வொரு காவலர்களுக்கும் 100 மில்லி அளவு கொண்ட சானிடைசர் பணியின் போது வழங்கப்படும். இதனுடைய தயாரிப்பு செலவும் மிக குறைவு என சுட்டிக்காட்டியுள்ள காவல் அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் பாதுகாப்பு பணிகளோடு தேவைக்கு ஏற்ப இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் காவல் துறையினரின் செயல்பாடு, மற்ற துறையினரையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உத்வேகத்துடன் செயல்பட வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments