கூட்டுறவுக் கடன், தொழிற்கடன் தவணை செலுத்த 3 மாதக் கால நீட்டிப்பு

0 3860

கூட்டுறவுக் கடன், தொழிற்கடன் ஆகியவற்றுக்கான தவணைகளை 3 மாதங்களுக்குப் பின் செலுத்தினால் போதும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்குத் தவணைத்தொகை செலுத்துவதற்கான காலம் ஜூன் 30 வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குத் தவணைத்தொகை செலுத்துவதற்கான காலமும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

மீனவ கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கான தவணை செலுத்தும் காலமும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன்பெற்றுள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்தும் காலமும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகத்திடம் கடன் பெற்றுள்ள 2000 நிறுவனங்களுக்கு கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்னும் பெயரில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புக் கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிப்காட் நிறுவனத்திடம் கடன்பெற்றுள்ள தொழில்நிறுவனங்கள் தவணை செலுத்தும் காலம் 3 மாதம் நீட்டிக்கப்படுகிறது.

சிப்காட் தொழில்பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்த 3 மாதக் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மோட்டார் வாகனத் தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க 3 மாதக் கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.

எடைகள், அளவைகள் உரிமங்கள் புதுப்பிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தவும் 3 மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments