கொரோனாவுக்கு சிகிச்சை.. கைராசி டாக்டர் கைது..! போலிகள் உலா மக்களே உஷார்
ராணிப்பேட்டையில் கொரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி வந்த போலி மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கையை பிடித்து பார்க்கும் கைராசி மருத்துவராக வலம் வந்தவர் கைதான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....
கைய பிடிச்சி பார்த்தே காய்ச்சலை விரட்டுவேன் என சுயவிளம்பரம் செய்து போலீஸ் பிடியில் சிக்கி உள்ள கைராசி மருத்துவர் மாதவன் இவர்தான்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் சக்தி ஹெல்த் கேர் என்ற பெயரில் கிளினீக் ஒன்றை மருத்துவமனை போல நடத்தி வந்தவர் மாதவன். இவர் கொரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி விளம்பரம் செய்து வருவதாக தகவல் வெளியானது.
சாதாரண சளி காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இது கொரோனாவின் அறிகுறிகள் என பயமுறுத்தி, அதற்க்கு கட்டணமாக 400 முதல் 500 ரூபாய் வரை பணம் வசூலித்துக் கொண்டு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்புவதாகவும் புகார் எழுந்தது.
கொரோனா காய்ச்சலை பாரசிட்டமால் மாத்திரையால் விரட்டும் அந்த பராக்கிரம டாக்டரை காண ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசாருடன், அனைத்து மருத்துவ மனைகளுக்கான தொடர்பு அதிகாரி ஐயப்பன் பிரகாஷ் நேரடியாக சென்றார். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மாதவன் டாக்டர் அல்ல டுபாக்கூர் என்பது தெரியவந்தது.
மருத்துவ தம்பி, 12 ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு மருத்துவ குறிப்புகளை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்படது.
இதையடுத்து போலி மருத்துவர் மாதவனை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் போலி டாக்டர் மாதவன் நடத்தி வந்த கிளீனிக்கிற்கும் சீல்வைக்கப்பட்டது.
பெரும்பாலான கிராமங்களில் இது போல சத்தம் இல்லாமல் கிளினிக் நடத்தி வரும் போலி மருத்துவர்கள், பணத்தாசையில் தவறான ஊசி போட்டு , முதியவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைக்கு கொண்டு செல்வது இன்று வரை தொடர்கிறது என்பதற்கு இந்த கொரோனா போலி மருத்துவரே சான்று..!
Comments