கபசுர குடிநீர் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா என ஆய்வு - தலைமை செயலாளர்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி வெளியில் நடமாடினால், மருத்துவமனைகளில் தனிமை முகாம்களில் வைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. நாளொன்றுக்கு 2 கோடி மூன்றடுக்கு முக கவசங்கள் தயாரிக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் மேற்கொள்ளும், கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கு, ஆளுநர் மனதார பாராட்டுகளை தெரிவித்ததாக, தலைமைச் செயலாளர் கூறினார்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தேவையான மருத்துவ பொருட்கள் இருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒன்றரை கோடி, மூன்றடுக்கு முக கவசங்களுக்கு HLL நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதுதவிர, திருப்பூரில், நளொன்று 2 கோடி முகக்கவசங்கள் தயாரிக்க, நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி வெளியில் நடமாடினால், மருத்துவமனைகளின் தனிமை முகாம்களில் வைக்கப்படுவார்கள் என்றும், தலைமைச் செயலாளர் எச்சரித்தார்.
Comments