மலிவு விலை காய்கறிகளை வாங்க நூற்றுக்கணக்கானோர் கூடியதால் நெரிசல்
சென்னை ராயபுரம் பகுதியில், மலிவு விலை காய்கறிகளை வாங்க நூற்றுக்கணக்கானோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ராயபுரம் தொகுதி மக்களுக்கு மலிவு விலையில் காய்கறி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். கூட்டுறவுத் துறை மூலமாக ராயபுரம் ராபின்சன் பூங்கா அருகே உள்ள மைதானத்தில் விற்பனையகம் அமைக்கப்பட்டு வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், தேங்காய், வாழைக்காய் உள்ளிட்ட 15 பொருள்கள் அடங்கிய ஒரு தொகுப்பு 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த சந்தை 15 நாள்களுக்கு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை என்பதாலும், இலவசமாக காய்கறி கிடைக்கும் என தவறாக எண்ணியும் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். பலர் வரிசையில் முந்த முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தொகுப்பின் விலை 250 ரூபாய் என அறிவித்ததும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மற்றவர்கள் காய்கறி வாங்குவதற்காக 1 மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்றனர்.
Comments