சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு...

0 3372

உத்தரப்பிரதேசத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினியை தெளித்தனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவையடுத்து டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படாததால் பெரும்பாலானோர் கால்நடையாகவே நடந்த வந்த அவலமும் அரங்கேறியது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு வந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி என்ற இடத்திற்குத் திரும்பினர். குறிப்பிட்ட நகரின் எல்லையில் அவர்களை சாலையில் அமர வைத்த மாநகராட்சி ஊழியர்கள், அவர்கள் மீது ரசாயனம் கலந்த கிருமி நாசினியைத் தெளித்தனர். இதனால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநில அரசின் இத்தகைய செயலுக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதேபோல் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட போது, குழந்தைகளும் அந்தக் குழுவில் இருந்ததால் தேசிய குழந்தைகள் உரிமைகள் காப்பு ஆணையம் இதில் தலையிட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் ரசயானம் கலந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆணையம், இதுகுறித்து 3 நாட்களில் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தகைய செயலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் குழந்தைகள் உரிமைகள் காப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் இடம்பெயர்வது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொழிலாளர்கள் இடம் பெயர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அப்போது, மத்திய அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தொழிலாளர்கள் புலம்பெயர்வதைத் தடுப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments