ஊரடங்கில் தவிக்கும் சாலையோர மனிதர்கள்...தங்குமிடங்களில் தங்கவைப்பது யார்?
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரே ஊரடங்கில் இருக்க, வீடற்ற சாலையோர மனிதர்கள் நோய் தொற்றும் அபாய சூழலில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.
வீட்டை விட்டு வெளியில் வந்தால் கொரோனா உங்கள் வீட்டிற்குள் கால் வைக்கும் என எச்சரிக்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். ஆனால் இந்த ஊரடங்கு நாட்களில் வீடே இல்லாத சாலையோர மனிதர்கள் எங்கு தங்குவர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால், சென்னையில் மட்டும் 60 வீடற்றவர்களுக்கான தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு தங்கும் விடுதியிலும் சராசரியாக 100 -லிருந்து 150 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பக்கம் தங்க வைக்கப்பட்டிருக்கும் சமூக நலக் கூடங்களிலும் போதுமான சமூக விலகல் இல்லாமல் கும்பலாக தங்கியிருக்க, சென்னையின் வெறிச்சோடிய சாலைகளின் ஓரம் நூற்றுக்கணக்கான முதியவர்கள் நோய் தொற்றும் அபாயச் சூழலில் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்கி யாசகம் பெற்று உண்டு வந்த இவர்கள் இன்று உணவுக்கு வழியின்றி உள்ளனர். ஊரடங்கு உத்தரவின் கெடுபிடிகளை மீறி அவ்வப்போது உணவு வழங்கும் தன்னார்வலர்களால் ஒரு வேளை பசியையாவது போக்கிக் கொள்கின்றனர்.
தன்னார்வலர்கள் சிலர் மாநகராட்சியின் 1913 என்ற சேவை எண் மூலம் தொடர்பு கொண்டு வீடற்றவர்களை மீட்டுச் செல்ல கூறினாலும், ஏற்கனவே நிரம்பி வழியும் சமூக நல கூடங்களால் நோய் தொற்று அச்சத்தால் அவர்ளை மீட்டுச் செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த
சூழலில் பிராட்வே பகுதியில் நீண்ட நாட்களாக திறக்காமல் பூட்டி வைத்திருக்கும் வீடற்றவர்களுக்கான தங்குமிடத்தை திறக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Comments