வியாபாரிகளா ? கொள்ளையர்களா ? கடைசிவரை காசு வராது !

0 12258

நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்து 7 நாட்களை கடப்பதற்கு முன்னதாகவே, சென்னையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்றுவருவதாக மளிகை மொத்த மற்றும் சில்லரைவியாபரிகள் மீது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நெருக்கடியான காலக்கட்டத்திலும் மக்கள் கையில் இருக்கும் கொஞ்ச பணத்தையும் பறிக்கும் வியாபார கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்று காய்கறி கடைகளுக்கு அரசு விலக்கு அளித்திருந்த நிலையில், ஞாயிற்று கிழமை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்தி மளிகை பொருட்கள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னையில் உள்ள பெரும்பாலான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது

சில்லரை வியாபாரத்தில் கடந்த வாரம் வரை 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட உளுந்து தற்போது 150 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு 120 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு 150 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

அதே போல 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட தனியா என்றழைக்கப்படும் மல்லி 150 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட காய்ந்த மிளகாய் 250 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட சோம்பு 280 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெந்தயம் 150 ரூபாய்க்கும் , 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு 240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பொதுவாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்கள் மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வருவதாகவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த மாநிலங்களில் இருந்து சரக்கை ஏற்றி வர லாரி ஓட்டுனர்கள் கிடைக்காததால் சரக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், தற்போதுள்ள நெருக்கடியான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள், மளிகை பொருட்களை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளை லாபத்துக்கு விற்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை, லாரிகளுக்கு சுங்க கட்டணம் கிடையாது, ஆர்.டி.ஓ வசூலும் இல்லை, இந்த நிலையில் வழக்கமான விலையை குறைத்து பொருட்களை வழங்கி இருக்க வேண்டிய மொத்த வியாபாரிகள், பேராசை கொண்டு விலையை ஏற்றி விற்பதால் அவர்களிடம் பொருட்களை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகளும் விலையை உயர்த்தி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விலையை உயர்த்தி கொடுக்க மறுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கு சரக்கு கொடுப்பதில்லை என்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட வியாபாரிகளே வண்டி கொண்டு வந்து எடுத்து செல்ல வேண்டிய நிலையையும் உருவாக்கி உள்ளதால், வரும் நாட்களில் மளிகை பொருட்களின் விலை இன்னும் இரு மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவை தொடர்பு கொண்டு மொத்த வியாபாரிகளின் இந்த விலை உயர்வு கொள்ளை குறித்து கேட்ட போது, அனைத்து பொருட்களுக்கும் மூட்டைக்கு 10 ரூபாய் மட்டுமே உயர்ந்திருப்பதாகவும், கூடுதலாக உயர்த்தப்பட்ட விலை நிலவரம் தனக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் மொத்த வியாபரிகளிடம் விசாரித்து விட்டு கூறுவதாக தெரிவித்தார்.

மளிகை பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாடை உருவாக்கி, பில் இல்லாமல் கொள்ளை லாபத்திற்கு விற்றுவரும் இத்தகைய வியாபார கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்கு நியாயமான விலையில் மளிகை பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments