வளைகுடாவில் இருந்து வந்தோரை.. பரிசோதிக்காததே கொரோனா பரவலுக்குக் காரணம்..!

0 8285

சவூதி அரேபியாவில் இருந்தும் துபாயில் இருந்தும் நாடு திரும்பியவர்களை முறையாகப் பரிசோதித்துத் தனிமைப்படுத்தாததே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 39 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 34 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துபாயின் நைப் என்னுமிடத்தில் தங்கி வேலை செய்துவிட்டு பிப்ரவரி மாதத்திலும் மார்ச் முதல் வாரத்திலும் நாடு திரும்பியவர்கள். தொடக்கத்தில் சீனா, தென்கொரியா, ஈரான், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீதே தீவிரக் கண்காணிப்பு இருந்தது.

மார்ச் இரண்டாம் வாரம் வரைக்கும் துபாய், சவூதி அரேபியா நாடுகளில் இருந்து வந்தவர்கள் விமான நிலையங்களில் காய்ச்சல் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதன் விளைவாகக் கடந்த பத்து நாட்களில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 20ஆம் தேதிக்குப்பின் காசர்கோட்டுக்கு வந்த ஆறாயிரத்து ஐந்நூறு பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 127 பேர் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் உள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் பாதிக்கு மேற்பட்டோர் வெளிநாடு சென்றுவந்தவர்கள். அதிலும் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர்கள்.

இதேபோல பீகார், குஜராத், தமிழ்நாடு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments