குவியும் விண்ணப்பங்கள், புலம்பும் போலீஸ்..! யாருக்கெல்லாம் அனுமதி?

0 10376

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அவசர பயணம் செய்வதற்கு அனுமதி கோரி காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் ஐயாயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதுவரை 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கெல்லாம் அனுமதி என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. இருக்கும் இடத்தில் அப்படியே அனைவரும் தங்கியிருக்க அறிவுறுத்தியிருந்தாலும், துர் நிகழ்வு, அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அவசர பயணம் மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை காவல் துறை சார்பில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு வெளியூர் செல்பவர்கள் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி அட்டையுடன் வெளியூர் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 75300 01100 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், gcpcorona2020@gmail.com மூலமும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் வெளியூர் செல்வதற்காக பலரும் தொடர்பு கொண்டுள்ளனர். இதுவரை ஈமெயில் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே ஐயாயிரத்தை கடந்து செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பலரும் படையெடுக்க தொடங்கியதால், நுழைவு வாயிலை போலீசார் இழுந்து சாத்தியுள்ளனர். காரணங்களை விசாரித்து இதுவரை 10 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அசாதரண சூழல் பற்றி உணராமல் வெவ்வேறு காரணங்களுக்காக பலரும் விண்ணப்பிப்பதால் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திருமண நிகழ்வுக்கு செல்பவர்கள், அது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் திருமணமாக இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கப்படும் என காவல் துறை விளக்கமளித்துள்ளது. இறப்பு காரணங்களுக்கு செல்பவர்களுக்கும், இறந்த நபர் இரத்த உறவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே விசாரித்து அனுமதி வழங்கப்படும் எனவும், அதே போல மருத்துவர்களின் பரிந்துரை இருந்தால் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட மூன்று காரணங்களுக்கு விண்ணப்பித்து நேரில் அழைத்தால் மட்டும் உரிய ஆவணங்களோடு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை விடுத்து தேவையில்லாமல் பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments