புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம் - டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்
நாட்டு நலன்கருதிச் சொந்த ஊருக்குப் புறப்பட வேண்டாம் எனப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கொரோனா பரவலைத் தடுக்க 3 வார முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், இவ்வாறு ஓரிடத்தில் கூடுவது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், நாட்டு நலன் கருதிச் சொந்த ஊருக்குச் செல்வதற்காகப் புறப்பட வேண்டாம் என்றும், இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். தங்குமிடமும் உணவும் வழங்குவதாக உறுதியளித்துள்ள கேஜ்ரிவால், நாள்தோறும் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments