ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

0 2775

ஊரடங்கால் டெல்லியில் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பணிபுரிந்து வந்த லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கிய தொழிலாளர்கள், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பல கிலோ மீட்டர்கள் தூரம் நடந்தே சென்ற நிலையில், மூடி சீல் வைக்கப்பட்ட எல்லை பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக உத்தர பிரதேச அரசு 1000 அரசு பேருந்துகளையும், 2000 தனியார் பேருந்துகளையும் இயக்கி வருகிறது.
மேலும் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டெல்லி அரசு சார்பிலும் எல்லைப்பகுதியிலிருந்து மேற்கு உத்தரபிரதேசத்துக்கு 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உணவு, தண்ணீர், பழங்களும் வழங்கப்பட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து கௌதம் புத்தா நகரிலிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், காசியாபாத்திலிருந்து 15 ஆயிரம் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்களது தகவல்கள் திரட்டப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படும் என்றும், அவர்கள் சென்றடையும் போது பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் காசியாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments