பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஏப்ரல் வரை இருப்பு உள்ளது - இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியாவில் பெட்ரோல், டீசலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ஏப்ரல் மாதம் வரை இருப்பு இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங் அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு காரணமாக பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும் குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில் சமையல் சிலிண்டர்களின் தேவை மக்கள் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்வதால் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், ஏப்ரல் மாதம் முழுமைக்கும் இருப்பில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவையான அளவு இருப்பு இருப்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல், வழக்கம்போல் வழங்கப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியன் ஆயில் சேமிப்புக் கிடங்குகள், எரிவாயு முகமைகள் வழக்கம்போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
சேமிப்புக் கிடங்குகளிலும், முகவர்களிடமும் தேவையான அளவு சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் சராசரியாக நாள்தோறும் 25 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் என்கிற அளவில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் முன்கூட்டித் தேவையில்லாமல் எரிவாயு உருளைகள் பெறுவதற்குப் பதிவு செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments