கிராமப்புறங்களை நோக்கி படையெடுக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 நாள் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்புகின்றனர்.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் கொரோனா பரவக்கூடிய ஆபத்து எழுந்துள்ளது.
இதனால் மாவட்ட வாரியாக கிராமங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலையில் நடந்து செல்வது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சமூக விலகல், தனிமைப்படுத்தல் கோட்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தவே முடியாது என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டமாக பேருந்துகளில் அலைமோதுவதும் சாலைகளில் திரள்வதும் மிகப்பெரிய ரிஸ்க் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மக்களை அதிகாரத்தைப்பயன்படுத்தி தடுத்து நிறுத்துவது மனிதாபிமானமில்லாத செயலாகவும் கருதப்படுகிறது .அவர்கள் எந்தெந்த ஊர்களுக்குச் செல்கின்றனர் என்பதை கண்டறிவதே இப்போதைக்கு சாத்தியமாக உள்ளது.
அந்த ஊர்களுக்கு சென்று அவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் முயற்சிகளை அரசு இயந்திரங்கள் முடுக்கி விட்டுள்ளன.
புலம் பெயர்ந்தவர்கள் திரும்பி வருவதால் ஆபத்து அதிகமாக உள்ள மாவட்டங்களையும் கிராமங்களையும் அடையாளம் காண்பதில் அரசு அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
லாக் டவுன் எனும் ஊரடங்கு 5ஆவது நாளை எட்டிய நிலையில் இதற்கான பலன்கள் வரும் நாட்களில் தெரிந்து விடும் என்றும் இதன்பிறகு மக்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்வார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த சில நாட்களில் பெரிய நகரங்களில் ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவிடும் போது நகரங்களில் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அரசு சுகாதாரத்துறையினர் அந்தப் போராட்டத்தை சிறிய ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
Comments