நாய்க்கும் பூனைக்கும் பசிக்குமுல்ல..! அதையும் கொஞ்சம் கவனிங்க

0 4416

சென்னையில் பெரும்பாலான உணவு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களும், பூனைகளும் உணவின்றி தவித்து வருகின்றன. அவற்றின் அட்சயபாத்திரமான குப்பை தொட்டிகளை பசியுடன் பரிதாபமாய் சுற்றி வரும் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா ஊரடங்கு அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற ஏழை எளிய மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. அரசின் இலவச அரிசி பருப்பு, எண்ணெய் வழங்குவதாக அறிவித்து நாட்கள் நான்கு முழுதாக கடந்தாலும் தற்போது வரை ரேசன் டோக்கன்கள் பல வீடுகளுக்கு சென்று சேரவில்லை..!

உழைக்கும் மனிதர்களே பசியால் வாடும் நிலையில் மனிதர்களுக்கு விசுவாசமாக தெருவில் வலம் வரும் நாய் மற்றும் பூனைகளின் நிலை எப்படி நலமாக இருக்கும்? சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு விட்டது. இதனால் உணவகங்களில் இருந்து விழும் மிச்சம் மீதியை உண்டு உயிர் வளர்த்த தெருவிற்கு காவலனாக வலம் வந்த நாய்களும், எலிகளை ஒலிக்கும் வேட்டையனான பூனைகளும் தங்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கிய குப்பை தொட்டிகளை ஏக்கத்துடன் வலம் வருகின்றது.

அருகில் திறந்திருந்த மளிகை கடைவாசலில் தவம் இருந்த பூனை, ஒரு கட்டத்தில் தனக்கு கிடைத்த பிஸ்கட்டை உண்டு பசியாற்றியது..

உணவக மிச்சம் மீதிகள் கைகொடுக்காத நிலையிலும் கூட விழிம்பு நிலை மனிதர்கள் எப்போதும் இவற்றை அக்கறையுடன் உணவளித்து பாசத்துடன் பார்த்துக் கொள்வார்கள். எந்த ஒரு தொழிலும் இல்லாமல் முடக்கப்பட்டு உள்ளதால் அவர்களே சாப்பாட்டிற்கு கையேந்தும் நிலையில் உள்ளதால் இவற்றை கவனிக்க இயலாத கையறு எற்பட்டுள்ளது.

யாராவது எதையாவது சாப்பிட தூக்கி போடமாட்டார்களா? என்ற பரிதவிப்பில் நடக்க கூட இயலாமல் பசியில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றன. வீடுகளில் இருந்து கொட்டப்படும் உணவு சிதறல்களில் ஏதாவது கிடைக்குமா என்று சில நாய்கள் பசியுடன் தேடுகின்றன..!

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல என்பதை உணர்ந்த பெண் ஒருவர் பட்டினப்பாக்கம் பகுதியில் தெருவில் சுற்றிதிரியும் நாய்களுக்கு பாசத்துடன் உணவு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

தெருவை காக்கும் நாய்கள் இப்படி சாப்பாட்டிற்கு அல்லாடிக் கொண்டிருக்க, வீட்டில் சொகுசாக வளர்க்கப்படும் தின்று கொழுத்த செல்லபிராணியோ, தின்பதற்கு சோம்பல் பட்டு படுத்து கிடக்கின்றது, அதன் எஜமானி வந்து தலையில் 2 தட்டு தட்டியதும் அவசர அவசரமாக உணவை சாப்பிடுகின்றது.

விலங்குகள் மூலம் ஒருபோதும் கொரோனா நோய் தொற்று ஏற்படாது என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. எனவே நாய்களுக்கும் பூனைகளுக்கும் பசிக்குமில்ல...? அவற்றிற்கும் உங்களால் முடிந்த உணவுகளை கொடுத்து கவனிங்க...! ஏனெனில் எல்லோரும்.. எல்லாமும்... இன்புற்றிருக்கட்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments