கண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்..! கொடியில் பழுத்து அழுகும் அவலம்

0 10685

கொரோனா பீதி மற்றும் காய்கறி ஏற்றும் வாகனங்கள் இருமடங்கு கட்டணம் கேட்பதாலும், ஊரடங்கால் வியாபரிகள் கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பதாலும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த காட்டுக்கரணை கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டிருந்தனர்.

கடந்த பிரவரி மாதம் முதலே அறுவடைக்கு தயாரான தர்பூசணி பழங்கள் டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என்று நம்பி இரவு பகலாக தண்ணீர் பாய்ச்சி வந்த விவசாயிகளின் தலையில் கொரோனா பீதியும், ஊரடங்கு உத்தரவும் பேரிடியாக இறங்கி உள்ளது.

ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செல்வழித்து தர்பூசனியை பயிரிட்டு பார்த்த விவசாயிகள், பலனை அனுபவிக்க இயலாமல் கடும் அதிச்சியில் தவித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளாவிற்கும் தர்பூசனி பழங்கள் கொண்டு செல்லப்படும்.

ஆனால் இந்த முறை ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு லாரிகள் வருவதில்லை என்றும் பழத்தை தொட்டுப்பார்த்து வாங்குவதால் அதில் கொரோனா கிருமி ஓட்டிக்கொள்ளும் என்று வியாபாரிகள் வாங்கிச்செல்ல வராததால் 100 டன்களுக்கு மேல்பட்ட தர்பூசணி பழங்கள் கொடியிலேயே பழுத்து அழுகி கொண்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

இதேபோல தண்டளம், பெரும்பாக்கம், வெள்ளப்புத்தூர் ஆகிய ஊர்களில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழங்களையும் வாங்கிச்செல்ல வியாபாரிகள் முன் வராததால் விவசாயிகள் பரிதவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

அதே போல சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைத்தார்களை வெட்டிச்செல்ல வியாபரிகள் வராததால் வாழைமரத்திலேயே பழம் பழுத்து அழுகுவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாகன கட்டணத்தை காரணம் காட்டி வியாபரிகள் வாழைத்தார்களை வெட்டுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகின்றது.

அதே போல கரூரில் வெள்ளரிக்காய்களை ஏற்றிச்செல்ல கூடுதல் கட்டணம் கேட்டதால் அவை அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டது.

காய்கறி மற்றும் பழங்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபரிகள் எதற்காக செல்வதில்லை? மேலும் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் வாகன உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள லாரி உரிமையாளர்கள், வழக்கமான நாட்களில் சென்னைக்கு பாரம் ஏற்றி வரும் லாரிகள் இங்கிருந்து செல்லும் போது வேறு ஏதாவது பாரம் ஏற்றிக் கொண்டு செல்வதால் வாடகை குறைவாக கேட்கப்பட்டதாகவும், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் திரும்பி செல்லும் லாரிக்கு எந்த பாரமும் கிடைக்காது என்பதால் இரு வழி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இருந்தாலும் வியாபரிகள் சம்பாதிக்கும் லாபத்தை பொறுத்தவரை இது எல்லாம் பெரிய தொகை கிடையாது என்றும், காய்கறி பழங்கள் அழுகும் பொருட்கள் என்பதால் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்குவதை, வியாபரிகள் வழக்கமாக செய்து வருவதாகவும், தற்போது பதற்றத்தில் இருக்கும் மக்களிடம் செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

வியாபரிகள் மனசாட்சியுடன் நடந்து கொண்டு விவசாயிகளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..! அதே நேரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் நிலங்களிலேயே வீணாவதை தடுத்து விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்து மக்களிடம் நியாயமான விலக்கு கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments