6 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு..!

0 2722

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 600ஐத் தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ ஆறு லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் 199 நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி சீனாவில் நோயின் தாக்கம் குறைந்து விட்டாலும், ஐரோப்பிய நாடுகளில் சற்றும் வேகம் குறையாமல் கொலைகார கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ளது.

6 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களுள் 25 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தில் புதிதாக 2 ஆயிரத்து 500 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அங்கு மட்டும் சுமார் 17 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும் 260 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள ட்விட் செய்தியில், இங்கிலாந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னைப் போல் வீட்டிலிருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளும் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதேபோல் ஈரானில் இதுவரை 35 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நேற்று மட்டும் 140 பேர் மரணித்ததால், பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500ஐத் தாண்டியுள்ளது. ஜெர்மனியில் தொற்று நோயால் ஏற்கனவே 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் மலையேற்றத்திற்குச் சென்ற 300க்கும் மேற்பட்ட ஜெர்மானியர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் முதற்கட்டமாக எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவுப் பகுதியான லுக்லாவில் இருந்த ஜெர்மானியர்களை தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்துவர நேபாள அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாடுகளைத் தொடர்ந்து நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அனைத்து நாட்டுடனான எல்லைகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments