ஆயிரக்கணக்கில் தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

0 3269

டெல்லியில் ஆயிரக்கணக்கில் தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல மணிக்கு 200 பேருந்துகள் வீதம் இன்று ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிழைப்பு இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகரில் நடைபயணம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காசியாபாத் ,நொய்டா உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அங்கு ஆயிரக்கணக்கில் திரண்ட தொழிலாளர்களால், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு தற்காலிகமாக பள்ளிகளைத் திறந்து விட்டு தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது. இரவு தங்குமிடங்களில் உள்ளவர்களுக்கும் அரசு உணவு பரிமாற ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை முதல் 1000 பேருந்துகளை இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

நொய்டா, காசியாபாத், புலந்தர்சஹர், அலிகர், உள்ளிட்ட பகுதிகளில் திரண்டிருக்கும் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல இந்த பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. இதற்கான ஆலோசனையில் நள்ளிரவு வரை கண்விழித்து ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இதனிடையே கடந்த மூன்று நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு பால் வாகனங்கள், லாரிகள் மற்றும் நடைபயணமாக வந்த ஒரு லட்சம் பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 29 ஆயிரம் கோடி பேரிடர் கால நிதியைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments