இந்தியாவை உலுக்கும் கொரோனா - 1000ஐ நெருங்கும் பாதிப்பு

0 9538

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. அந்த தொற்றுநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை 918 பேராக அதிகரித்துள்ளது. இதில் 819 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 80 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 800ஐ தாண்டிய நிலையில் இரண்டாம் கட்டத்தில் இருந்து இந்தியா மூன்றாம் கட்ட பாதிப்புக்கு தயாராகி வருகிறது. ஒடிசாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறக்கூடிய நிலையில் பரவி வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சமூகத் தொற்றாக அறிவிக்க எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆயினும் எத்தகைய நிலையையும் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதனிடையே கேரளாவில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் இதுவரை 187 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடுக்கி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏ.பி. உஸ்மானுக்கு நோய்த் தொற்று பரவியது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உஸ்மான் வெளிநாடு செல்லவில்லை என்ற போதும் அவர் உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளார். அவர் மூலமே அவருக்கு இந்த நோய் பரவியதாக கருதப்படுகிறது.

ஆனால் உஸ்மான் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்து மசூதியில் மக்கள் கூட்டத்தில் தொழுகை நடத்தி, ஆயிரக்கணக்கானோருடன் பேசியிருப்பதால் எத்தனை பேருக்கு அவர் மூலம் நோய் பரவியது என்று கணிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

மும்பையில் 85 வயது மருத்துவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து மகராஷ்ட்ராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

அங்கு 186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் ஜாம்பிபாடா பகுதியில் வெளிநாடு செல்லாத 37 வயது நபருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் குடிசைப் பகுதியில் வசிப்பதால் அவரைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று மும்பையில் பல்வேறு பகுதிகளில் குடிசைப்பகுதிகளில் 7 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல லட்சம் பேர் மும்பையின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் நிலையில் நோய்ப் பரவல் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க டெல்லி திகார் சிறையில் இருந்து 356 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தெலங்கானா மாநிலத்திலும், கொரோனா தொற்றுநோய் பாதிப்பால், முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments