கொரோனாவைக் குணமாக்கும் மருந்தா? ஆராய்ச்சியில் மெய்ப்பிக்க வேண்டுகோள்
கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ஆய்வகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடத்துமாறு ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்த, ஓமியோபதி மருத்துவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்த, ஓமியோபதி மருத்துவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, கொரோனா வைரசை அழிக்கவும், அது வராமல் தடுக்கவும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக நாட்டு மருத்துவத் துறை வல்லுநர்கள் கூறி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இத்தகையோர் மருத்துவ ஆராய்சிக் குழு, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக்கான குழு ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதைச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். தேவைப்பட்டால் நாட்டு மருத்துவர்களின் உதவியையும் நாடுவோம் எனத் தெரிவித்தார்.
நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உள்ள வளங்களைக் கொண்டு கிருமி நாசினி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தொலைமருத்துவம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Comments