பிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி

0 6063

கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், இந்திய பொது நிதி முறையின் கீழ், மத்திய அரசு மட்டுமே ரிசர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களை சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட்டுள்ள நிலை, பொருளாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத, மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இத்தகைய காலகட்டங்களில் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், புத்துயிரூட்டவும் புதுமையான வழிமுறைகளை கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், நிதிப் பற்றாக்குறை மாநில ஜிடிபி-யில் 3 சதவீதத்தை தாண்டக் கூடாது என்பதைத் தளர்த்தி, மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை தவிர்த்த வேறு பிற வடிவங்களில் மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன்பெற்று மத்திய அரசு இந்த நிதியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் ஜிடிபிக்கு, மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு அடிப்படையில் இந்த சிறப்பு தொகுப்பு நிதியை பகிர்ந்து வழங்குவதோடு, தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் நலன் கருதி, துணிச்சலான, கடினமான, புதுமையான முடிவுகளை எடுக்கும் பிரதமர், இந்த சிறப்பு கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments