கமல் அலுவலகத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்... ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு

0 8706

வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கரை நடிகை கவுதமியின் வீட்டில் ஒட்டுவதற்கு பதிலாக, நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டியதால் குழப்பம் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களது வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஸ்டிக்கர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களில் படப்பிடிப்பு அல்லது பிற காரணங்களுக்காக கமல் வெளிநாடு செல்லாத நிலையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்குள் நடிகை கவுதமி வெளிநாடு சென்று திரும்பியதாகவும், அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதற்கு பதிலாக கமலின் அலுவலகத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

image

கவுதமியின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியின் அடிப்படையில் ஸ்டிக்கரை ஒட்டியதாகவும், பின்னர் அவர் தற்போது இருக்கும் வீட்டின் முகவரி கண்டறியப்பட்டதால் ஸ்டிக்கர் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் பிரிந்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பமே கவுதமி வீட்டிற்கு பதில் கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட காரணமாகும்.

இது குறித்து விளக்கமளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தான் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்றும், தான் தனிமைபடுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 24 ஆயிரம் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் விளக்கமளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments