5 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என கண்டறியும் கருவி
5 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என கண்டறிந்து சொல்லும் சிறிய அளவிலான போர்ட்டபிள் கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கருவியை அறிமுகப்படுத்தியுள்ள அப்போட் லேபரட்டரீஸ் Abbot Laboratories நிறுவனம், அடுத்த வாரத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. பிரட் டோஸ்டர் அளவிற்கு சிறிதாக இருக்கும் இந்த கருவி மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், கொரோனா தொற்று உள்ளதா என்பதை 5 நிமிடங்களில் சொல்லிவிடும் என அப்போட் லேபரட்டரீஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா இல்லை என்றால், அது 13 நிமிடங்களில் உறுதிப்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மருத்துவமனைகளில் மட்டுமின்றி, கோவிட்-19 தொற்றுநோய் பரவும் பகுதிகளில் விரைந்து சோதனைகளை மேற்கொள்ள இந்த கருவி உதவும். இந்த விரைவுச் சோதனை முறைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகாரம் வழங்கவில்லை என்றாலும், அவசர காலங்களில் மருத்துவமனைகளும் சுகாதார மையங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அப்போட் லேபரட்டரீஸ் தெரிவித்துள்ளது.
Comments