”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா ?

0 7094

தினம்தோறும் வாசிக்கும் செய்தி நாளிதழ்களால் கொரோனா பரவுமா என்ற அச்சம் பலரிடம் எழுந்துள்ள நிலையில், அதற்கான விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தினசரி செய்தித்தாள்களின் தலைப்பு முதல் கடைசி வரி வரை படித்து முடித்தால் மட்டுமே அன்றைய தினம் முழுமையடைந்தாக உணரும் மனநிலை கொண்டவர்கள் இன்றும் ஏராளம். கொரோனா நோய்த்தொற்று பலரது மனதில் பீதியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் செய்தி சேனல்களும், நாளிதழ்களும் முக்கிய பங்காற்றுகின்றன.

தினசரி செய்திதாள்களை பக்கம் பக்கமாக தொட்டு படிப்பதினால் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் பலருக்கு எழுந்துள்ள நிலையில், அது தேவையற்றது என்கிறது தினமலர் நாளிதழ் செய்தி நிறுவனம்.

அச்சகத்துக்குள் நுழையும் போதே அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து, வாகனத்தில் வருபவர்களையும் பரிசோதித்து உள்ளே அனுமதிப்பதைப் பார்க்க முடிந்தது .

ஆசிரியர் குழுவினால் இறுதி செய்யப்பட்ட செய்திகள் கணிணியில் இருந்து நேரடியாக அதி நவீன அச்சக இயந்திரத்துக்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

பேப்பர் கட்டுகள் நவீன அச்சக இயந்திரத்தில் பொருத்தப்பட்ட பின்னர், சில நொடிகளில் ஆயிரக்கணக்கான நாளிதழ்கள் மனித கைப்படாமலேயே அச்சடித்து வெளியேற்றப்படுகின்றன.

பின்னர், பகுதிவாரியாக செல்வதற்காக இயந்திரத்தினால் நாளிதழ்கள் பிரிக்கப்பட்டு இறுதியாக மீண்டும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கிளவுஸ் அணிந்த பணியாளர்களால் வாகனங்களில் ஏற்றி அனுப்படுகின்றன.

தொடர்ந்து அச்சடிக்கப்பட்ட பேப்பர்களை வீடுகள் தோறும் கொண்டுச் சேர்க்கும் பேப்பர் பாய்'களையும் கூட சானிடைசர் உபயோகிக்கவும் கிளவுஸ் அணியவும் அறிவுறுத்தியுள்ளதால் செய்திதாள்களினால் கொரோனா பரவ வாய்ப்பே இல்லை என்கிறார் அச்சக மேலாளர் நாராயணன். 

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி செய்திகளை கொண்டு சேர்க்கும் நாளிதழ்களால் தொற்று பரவிடக் கூடாது என்ற நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக கூறும் அச்சகத்தினர், ஒருவரிடம் இருந்து மற்றொருவர் பேப்பர் வாங்கி படிக்கும்போது கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments