காய்கறி சந்தைகளில் கவனம் தேவை !
தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் மக்கள் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டமாக சேர்ந்து காய்கறிகள் வாங்கிச் செல்வதையும் பார்க்க முடிந்தது.
சேலத்தில் காய்கறி சந்தைகளில் நெருக்கடிகளைத் தவிர்க்க, அவை வழக்கமாக கூடும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சூரமங்கலம் ஜங்சன் உழவர் சந்தை மற்றும் நான்கு ரோடு பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகியவை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
சந்தைகளில் பொருட்கள் வாங்குவோர் இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டி அளவீடுகள் போடப்பட்டுள்ளன. காய்கறி வாங்க வருவோர் கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
விழுப்புரத்தில் உழவர் சந்தை நகராட்சி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, வாடிக்களையாளர்களுக்கான இடைவெளி அளவீடுகள் போடப்பட்டு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் ஒலிப்பெருக்கியில் எச்சரித்தாலும் அதனை கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வதை பார்க்க முடிந்தது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கரூரில் ஊரடங்கு உத்தரவு குறித்த விழிப்புணர்வே இன்றி சந்தைப் பகுதிகளிலும் சாலைகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதைக் காண முடிந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் சமூக விலகலை கடைபிடிப்பது குறித்து பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையும் மீறி, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றி வருகின்றனர். அதேபோல் சந்தைகளிலும் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
Comments