கொரோனா எதிரொலி -ஜி 20 தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

0 3165

அனைத்து மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் உயர்ந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜி 20 காணொலி மாநாட்டில் பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுடன் ஜி20 நாடுகளின் மாநாடு காணொலி மூலம் தொடங்கியது. இதற்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையேற்றார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி, மருத்துவ ஆய்வுகள், மருத்துவ தகவல்களை பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கொரோனா போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய மோடி, லாப நோக்கை மறந்து மக்களின் நலன்களை முதன்மையாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.

கோவிட் 19 நோய்க்கு பலியானவர்களில் 88 சதவீதம் பேர் ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மோடி சுட்டிக் காட்டினார். கொரோனா எத்தனைக் காலத்துக்கு நீடிக்கும் என்று எந்த நாட்டினராலும் வரைமுறை வகுக்க முடியவில்லை. எனவே நோய் பரிசோதனைக் கருவிகள் அதிக அளவில் உற்பத்தி செய்து அவை உடனுக்குடன் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவத் தொடங்கி 3 மாதங்களாகியும் இன்னும் அதற்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதையும் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் ஐஎம்எப், ஐநா.சபை, மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்களும் பங்கேற்றனர்.

சுமார் 5 லட்சம் கோடி டாலர் நிதியை கொரோனாவுக்கு எதிரான யுத்தத்திற்காகவும் உலகப் பொருளாதார சீரமைப்புக்காகவும் அளிக்க ஜி 20 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments