வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! கிருமி நாசினி வழங்கப்படுமா.?

0 4875

விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கொரோனா கிருமிகளை அழிக்கும் வகையில் சென்னை மாநராட்சியின் 9 மண்டலங்களில் வீதி தோறும் ரசாயண கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிராக்டருடன் கூடிய நவீன எந்திரங்கள்..!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் லாரிகளில் கிருமி நாசினி மருந்துகளை கொண்டு சென்று தெரு தெருவாக தெளித்து வருகின்றனர்.

நகரங்களுக்கும் பேரூராட்சி பகுதிகளுக்கும் கிடைத்திருக்கும் சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களை இன்னும் சென்றடையவில்லை. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொரோனா நோய் தொற்றை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் மேல மங்கல குறிச்சி கிராமத்தில் கொசுவுக்கு மருந்து அடிக்கும் எந்திரத்தை கொண்டு உள்ளூர் இளைஞர்களே வீதி வீதியாக மருந்து தெளித்து வருகின்றனர்.

திருச்செந்தூரை அடுத்த கீழ நாலு மூலைக்கிணறு கிராம மக்கள் பிளாஸ்டிக் டிரம்களில் மஞ்சள் தண்ணீரை நிரப்பி, வேப்பம் இலையை போட்டு வீதி வீதியாக தெளிக்க தொடங்கி இருக்கின்றனர். சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வேப்பிலையும் மஞ்சள் நீரும் தான் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கெல்லாம் மேலாக விழுப்புரம் மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தில் கொரோனா கிருமியை பாரம்பரிய முறைப்படி விரட்டுவதற்காக கிராமத்து இளைஞர்களுக்கு உதவியாக அம்மியில் வேப்பிலை அறைத்து கொடுக்கின்றனர் பெண்கள்..!

பெண்கள் அறைத்துக் கொடுத்த வேப்பிலையை பேரல்களில் உள்ள மஞ்சள் கலந்த தண்ணீருடன் கரைத்து டிராக்டரில் ஏற்றிச்சென்று இளைஞர்கள் தெரு தெருவாக தெளித்தனர்.

வேப்பில்லை, மஞ்சளால் கொடிய கிருமியான கொரோனாவை விரட்ட இயலுமா? இயலாதா? என்பது இங்கே முக்கியம் அல்ல, கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருக்கின்றது. இதனை உணர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிராமப்புறங்களுக்கும் கிருமி நாசினி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க சுகாதாரதுறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களும், தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் விதமாக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்வதோடு, கும்பலாக சுற்றாமல் வீட்டுக்குள் தனித்திருப்பதே அனைவருக்கும் நலம் உண்டாகும்..! என்பதை உணர வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments