வட்டி வசூல்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை..!

0 23466

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசல் உள்ளிட்ட பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். மீறினால் கடுமையான கிரிமினல் நடவடிக்கைகள் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவும் அது தொடர்பான உத்தரவுகளும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இது போன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெரிய காய்கறி மார்க்கெட் இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது சமூக விலகியிருத்தல் விதிகளின்படி, மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா ஆட்கொல்லி நோய், மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்பதை ஒலிபெருக்கி, தண்டோரா, துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments