தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26ஆக உயர்வு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 23 பேர் கொரோனா பாதிப்பு இருந்தது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. இந்நிலையில் மேலும் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 18 வயது இளைஞர் ஆவார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபரோடு தொடர்பில் இருந்தவர் ஆவார்.
இன்னொருவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த 63 முதியவர் ஆவார். துபாயில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் வாலாஜாபேட்டையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3ஆவது நபர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுற்றி வந்த தாய்லாந்து நாட்டினரோடு தொடர்பில் இருந்த 66 வயது முதியவர் ஆவார். அவரும் மருத்துவமனையில் தனிவார்டில் வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், 3 பேரும் தனிவார்டுகளில் வைக்கப்பட்டிருப்பதாகவும், 3 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments