பால் விற்பனை நேரம் குறைப்பு..!
தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்கப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க நிறுவனரும், மாநில தலைவருமான பொன்னுசாமி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா விவகாரத்தில் பொதுமக்களின் அஜாக்கிரதை, மெத்தனத்தால் பால் முகவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் சில்லறை கடைகளுக்கு தனியார் பால் விநியோகம் செய்வதில்லை என்றும், முகவர்களின் கடைகளில் மட்டும் பால் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கு மேல் சமூகவிரோதிகள் சிலரால் விற்பனை செய்யபடுவதாக தகவல் வருவதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நேரங்களிலும் தங்கு தடையின்றி பால் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் கிடைத்திடும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் சேவையில் ஆவின் நிர்வாகம் அக்கறையுடன் செயல்படும், ஆதலால் ஆவின் பால் விநியோகம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments