கொரோனா: அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இவர்களில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 236 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்கள் முன்வரவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் வரிசெலுத்துவோருக்கு நேரடியான பணப்பட்டுவாடா அடுத்த 3 வாரங்களுக்குள் வழங்கப்படும் என நிதியமைச்சர் ஸ்டீவ் நுசின் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் 3 மாதங்களுக்கு மந்த நிலையிலேயே நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நியூயார்க்கில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை மூடப்பட்டது. இந்நிலையில் இந்த கார் தயாரிப்புத் தொழிற்சாலை விரைவில் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள டெஸ்லா நிறுவன செயல் இயக்குநர் எலான் மஸ்க், இந்த ஆலையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Comments