வீட்டைவிட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்..! பிரம்பு அர்ச்சனை காத்திருக்கு உஷார்

0 11980

தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் பிரம்பால் அர்ச்சனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனாவசியமாக யாரும் வெளியில் சுற்றவேண்டாம் என்று சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் காட்சிகளை பார்த்து பல லட்சம் பேர் நெகிழ்ந்து போயினர்.!

இதனை பார்த்து போலீஸ் ரொம்ப சாப்ட்டா டீல் செய்வதாக நினைத்து இரு சக்கர வாகனத்துடன் சாலையில் சுற்றி திரிந்தோரை பிரம்பால் சாத்து சாத்தென்று சாத்தி, தங்கள் கோபத்தை வெளிக்கட்டியுள்ளனர் கோயம்புத்தூர் போலீசார்..!

 கோயம்புத்தூர் போலீசுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தூத்துக்குடி போலீசார் கையில் சிக்கிய புள்ளீங்கோக்களுக்கு லத்தியார்ச்சனை செய்ய, டியூக்குடன் சிக்கியவர்கள் வண்டியை போட்டுவிட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

சேலம் ஓமலூர் போலீசும் ரொம்ப ஸ்ரிக்ட்டுதான் என்று அதிரடி காட்டியதால் வாகன ஓட்டிகள் அடங்கினர்.

திண்டுக்கல்லில் பணி முடிந்து வீடுதிரும்பிய மருத்துவரை அடித்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது வீரத்தை காட்டியதால் சர்ச்சை உருவானது

அவரைப் போலவே சென்னை தண்டையார் பேட்டையில் வீதியில் விழிப்புணர்வு இன்றி மக்கள் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தண்டையார் பேட்டை காவல் ஆய்வாளர் தேவேந்திரன், அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்ற மாஸ்க் அணிந்த சைக்கிள் ஓட்டியை மறித்து வம்பு செய்தார்.

அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கான போலீசாரும் வாகனத்தில் பயணித்தவர்களை மறித்து தடியுடன் ருத்ர தாண்டவமாடினர்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது போல கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாகன ஓட்டியை தாக்கிய போலீசாருக்கு பதில் அடி கிடைத்தது..!

சுறுங்கச்சொன்னால் இவ்வளவு நாளும் காவல் நிலையத்தில் அமர்ந்து சொகுசாக பணி செய்த காவல்துறையினர் பலர், ஊரடங்கை செயல்படுத்த மொட்டை வெயிலில் வீதிகளில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடம் ஆத்திரம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

ஆக, அடுத்த 20 தினங்களுக்கு இரு சக்கரவாகனத்துடன் வீதியில் வலம் வந்து, சாகசம் செய்வதை விட்டு தனித்திரு, விழித்திரு கட்டாயம் வீட்டிலேயே இரு..!

இல்லையேல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் நான்கு மட்டும் அல்ல 5ஆவதாக அடியும் விழும் என்பதே காவல்துறை மக்களுக்கு சொல்லும் எச்சரிக்கை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments