மிரட்டும் கொரோனாவை விரட்டுவோம் பிரதமர் மோடி சூளுரை
காட்டுத் தீயை விட வேகமாகப் பரவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி , நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லட்சுமணக் கோடு வீட்டு வாசலில் போடப்பட்டுள்ளது என்றும் அதனை மீற வேண்டாம் என்றும் மோடி நாட்டு மக்களை கைகூப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் 2 - வது முறையாக மீண்டும் உரை ஆற்றினார்.
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருவதாக கூறிய அவர், அடுத்த 21 நாட்கள் எவர் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு, கேட்டுக் கொண்டார்.
தனித்து இருப்பது மட்டுமே, கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என கூறிய பிரதமர், வீட்டை விட்டு வெளியே நடமாடினால், கொரோனா உங்கள் வீட்டுக்குள் புகுந்து விடும் என எச்சரித்தார்.
கொரோனா நம்மை தாக்காது என யாரும் நினைக்க கூடாது என குறிப்பிட்ட அவர், உறவினர்களை கூட வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
கொரோனா வேகமாக பரவ துவங்கினால், அதனை கட்டுப்படுத்த முடியாது என கூறிய பிரதமர், அரசுடன் மக்கள், ஒத்துழைத்தால் மட்டுமே 100 சதவீதம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
வல்லரசு நாடுகள் கூட, கொரோனாவை ஒழிக்க முடியாமல் திணறி வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவுக்கு இது ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றார். நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரையும் காக்க, தேசத்தை முடக்குவதை தவிர, வேறு வழியில்லை என பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியை விட, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என திட்ட வட்டமாக கூறிய பிரதமர்,கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார்.
நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று ஒருவருக்கு வந்தால், ஒரு வாரத்தில் இருந்து 16 நாட்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரவும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்தார். எனவே, கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
Comments