கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் அனுமதி

0 3278

கொரோனா பாதிப்பு மற்றும் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் ஜூலை 31ஆம் தேதி வரை இயங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 569 குடிநீர் ஆலைகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க ஜூலை 31 வரை அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் உரிமம் கோரி விண்ணப்பித்த, தகுதியுடைய  குடிநீர் ஆலைகளையும், தற்காலிகமாக ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதுதொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகளை பொறுத்தவரை, 396 விண்ணப்பங்கள் உரிமம் கோரி வந்துள்ளதாகவும், உரிய விதிகளின்படி அவை விரைந்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.

அதேபோல அரசின்  நிபந்தனையின்படி உற்பத்தி செய்யும் குடிநீரில் 15 சதவீதத்தை அனைத்து குடிநீர் ஆலைகளும், அரசுக்கு  வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments