குருவிக்கு கூட, இங்கே கூடு இருக்கு வாழும் மனிதருக்கு வீடு எங்கே..?
மக்கள் ஊரடங்கினை பின்பற்றிய அனைவரும் வீட்டிற்குள் முடங்கிய நிலையில், வீடற்ற சாலையோரவாசிகள் உணவின்றி தவித்தனர்.
மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் போது, சாலையோரவாசிகளின் நிலை என்ன? - வீடில்லாதோர் எங்கே தங்குவார்கள்? என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், 60 இடங்களில் வீடற்றோர் தங்கும் காப்பகங்கள் இருப்பதாகவும், அங்கே வீடில்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் விளக்கம் அளித்திருந்தது.
ஆனால், ஒரு சில பகுதிகளில் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படாமல் பலரும் சாலையோரம் வசித்தனர். ஹோட்டல்கள் - சிற்றுண்டி சாலைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டதால், பலர், சாலையோரம் சமையல் செய்து சாப்பிட்டனர். கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் சாலையோரவாசிகள், குடும்பம் - குடும்பமாக தாய கட்டை, கல்லாங்காய் போன்ற மரபு விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்தனர்.
சின்னஞ்சிறு குருவிக்கு கூட இங்கே கூடு உண்டு. ஆனால், வாழும் மனிதர்களுக்கு இங்கு வீடு இல்லை. வீடற்றோர் இல்லங்களில் தங்க வைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற வாயிலுக்கு எதிரிலேயே சாலையோரம் இவர்கள் உணவின்றி தவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், உணவின்றி தவித்த தம்பதியினரை மீட்டனர். என்.எஸ்.சி போஸ் சாலை, பிராட்வே பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவிற்கு வழியின்றி தவித்த சாலையோரவாசிகளும் மீட்கப்பட்டு, வீடற்றோர் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் உணவின்றி சாலையோரம் வசிப்பவர்களை கண்டால் 1913 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments