இயல்புநிலைக்கு திரும்பிய தமிழகம்..!
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட 22 மணி நேர மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது. சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு சந்தை போன்றவை இயங்குகின்றன.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு முடிந்ததை அடுத்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு மார்ச் 31 வரை பள்ளி- கல்லூரிகள் இயங்காது என அறிவித்தது. பெரு நிறுவனங்கள் மற்றும் பல் பொருள் அங்காடிகளும் இயங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்கள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை மட்டுப்படுத்த பிரதமர் மோடி நேற்று ஒரு நாள், நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கட்டுக்கோப்பாக சுய ஊரடங்கை கடைபிடித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஐந்து மணிக்கு பிறகு சிறு சிறு கடைகள், தேனீர் கடைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. அதிகாலையில் நகர் முழுவதும் பால் விநியோகம் வழக்கம்போல் நடைபெற்றது.
வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காய்கறிகள் சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் லாரிகளில் வந்திறங்கின. வியாபாரிகள் அதிகாலையிலேயே அவற்றை விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.
பிற மாநிலம் செல்லும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டலும், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய தேவைக்காக தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளான மாநகர புறநகர் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகாலை ஐந்து மணி முதல் தமிழக அரசு சார்பில் இயக்கக்கூடிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்துகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னர் பேருந்து பணிமனையில் இருந்து பயணிகள் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்பட்டன.
சென்னை கோயம்பேட்டில் குறைந்து அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால், சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி செல்கின்றனர். மக்கள் சுய ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து வெளியூர் செல்ல, பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது.
தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments