ஊரடங்கு உத்தரவு வதந்திகளும், உண்மையும் !
பொதுமக்கள் இன்று ஒரு நாள் மட்டும் ஏன் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்கவேண்டியதின் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
நோய்த்தொற்று உள்ள ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் நோய் பரவ வாய்ப்புள்ளது என்பதால், ஒரே இடத்தில் அதிகப்படியான மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே ஒரு நாள் மட்டும் அனைவரும் வீட்டிலேயே இருந்து சுய ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ளும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார்.
ஆரம்பத்தில் இத்தாலி அரசு கொடுத்த எச்சரிக்கைகளை அந்நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலேயே அங்கு அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு என்பது வேகமாக பரவி வந்தாலுமே. நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் நிலையிலேயே உள்ளது. எனவே, மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருந்தாலே கொரோனா என்ற கொடிய வைரஸை விரட்டி விடலாம் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
அதேநேரத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாள் மக்கள் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். இன்றையதினம் விமானம் மூலமாக நாடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.
இன்னும் ஒருபடி மேலே போய் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வெயிலில் வந்து நின்றால் கொரோனா வைரஸ் வெயிலில் பட்டு இறந்து விடும் என்றும் வதந்திகளை சிலர் சமூக வலைதளங்கள் மூலம் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவால் கொரோனா முற்றிலும் ஒழிந்து விடாது.. இம்முயற்சி மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே ஆகும். அரசு என்னதான் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும், சுய கட்டுப்பாடும் இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனம்.
Comments