”மக்கள் ஊரடங்கு”.. நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தஞ்சம்..!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கியது. 14 மணி நேர சுய ஊரடங்கால் கோடிக் கணக்கான மக்கள் வீடுகளிலேயே உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று காலை 7 மணிக்கு மக்கள் ஊரடங்கு தொடங்கியது.
மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சேவைகளும் இயங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் பரபரப்பாக இயங்கும் பெருநகரங்கள்கூட வெறிச்சோடியுள்ளன.
வீடுகளுக்குள் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என இன்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர், இன்றைய நடவடிக்கை எதிர்காலத்திற்கும் உதவும் என குறிப்பிட்டுள்ளார். அனைவரும் ஒன்றுகூடிக் கடைப்பிடிக்கும் இந்த ஊரடங்கு, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நமது கரங்களை வலுப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் உள்ள மகாராஷ்டிராவில் மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் நிதித் தலைநகரும் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும் பெருநகரமான மும்பை வெறிச்சோடி உள்ளது. நாக்பூர் உள்ளிட்ட நகரங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பஞ்சாப்பில், அமிருதரசஸ், லூதியானா உள்ளிட்ட நகரங்களில் சாலைகளும், கட்டிடங்களும் மட்டுமே தென்படுகின்றன. மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் பெரும் அமைதி நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில், மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடிய, வாகனங்களை ஓட்டிவந்த சிலருக்கு போலீசார் பூக்களை வழங்கி, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவின் வீதிகள், மக்கள் ஊரடங்கால் போக்குவரத்து எதுவும் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
பீகாரில் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் ஆள் நடமாட்டமின்றி பெரும் அமைதி நிலவுகிறது. தன்னார்வலர் ஒருவர் போக்குவரத்து போலீசாருக்கும், சட்டம்-ஒழுங்கு காவலர் ஹேண்ட் சானிட்டைசர் வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீரிலும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தோடா உள்ளிட்ட நகரங்களில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஜார்க்கண்டில் ராஞ்சி உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தலைநகர் டெல்லியைப் போலவே, ராஞ்சியிலும் இன்று இரவு 10 மணி வரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், மக்கள் ஊரடங்கால் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் காணப்படுகிறது. அலகாபாத், வாரணாசி, மீரட் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியுள்ளன.
மக்கள் ஊரடங்கையொட்டி புதுச்சேரியில் பால் விற்பனையகம் மற்றும் மருந்தகத்தை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் இன்றி சுற்றுலா தலங்கள், கடற்கரை சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகின்றன. கோயில்கள் அனைத்தும் காலை 7 மணிக்கே நடை அடைக்கப்பட்டன. கிறிஸ்துவ தேவாலயங்களில் திருப்பலிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆரவாரம் இன்றி அமைதியாக காட்சியளிக்கின்றன.
Comments