கொரோனாவை கட்டுபடுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் ஜெர்மனி
கொரோனா தொற்றுள்ளவர்களை விரைந்து கண்டறியவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதே சிறந்த வழி என ஜெர்மனி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உணர்த்தியுள்ளது.
ஜெர்மனியில் 22 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அங்கு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனி போன்ற மக்கள்தொகை கொண்ட நாடான இத்தாலியில், 53,578 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை அங்கு 4,825 பேர் உயிரிழந்துள்ளனர்.
53 ஆயிரம் பேருக்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் இத்தாலியில் உயிரிழந்துள்ளதோடு ஒப்பிட்டால், ஜெர்மனியில் 22 ஆயிரம் பேருக்கு 84 பேர்தான் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை ஜெர்மனியைவிட இருமடங்கு அதிகம், ஆனால் இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையோ 60 மடங்கு அதிகம்.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சென்றாலும், உயிரிழப்புகளை மிகக்குறைவான அளவுக்குள் கட்டுப்படுத்துவதில் ஜெர்மனி வெற்றிபெற்றுள்ளது. இதற்கு, பரிசோதனைகளை ஜெர்மனி தீவிரப்படுத்தியதே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை என்பதுதான் வைரசை கட்டுப்படுத்த சிறந்த வழி. இந்த ஆலோசனையை ஜெர்மனி உறுதியாக பின்பற்றியுள்ளது. ஜெர்மனியின் ஆய்வகங்கள் ஒவ்வொரு வாரமும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்துகின்றன. மார்ச் 20ஆம் தேதி நிலவரப்படி, ஜெர்மனி 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்தியுள்ளது. இது பிற ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமொத்தமாக நடத்திய சோதனையை விட அதிகம். உயிரிழப்புகளை அதிகம் சந்தித்த இத்தாலி, 26 சதவீதம் அளவுக்கு குறைவான சோதனைகளையே நடத்தியுள்ளது.
ஜெர்மனியில் பெரும் எண்ணிக்கையில் பரிசோதனை நடத்தியது, அறிகுறிகள் வெளிப்படவில்லை என்றாலும் தொற்று உள்ளவர்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, ஜெர்மனியில் பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வயதும் ஒரு முக்கிய காரணமாகும். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜெர்மனியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், 60 வயதுக்கு குறைந்தவர்கள். ஜெர்மனியில் கொரோனா நோயாளிகளின் வயது சராசரி 47 ஆகவும், இத்தாலியில் 63 ஆகவும் இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதேசமயம், கொரோனா பாதித்தவர்களில் பலர் தொடக்க நிலையிலேயே இருப்பதால், வரும் நாட்களில் மேலும் பலர் தீவிரமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்பதையும் ஜெர்மனி அரசு எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளது.
Comments