ஊரடங்குக்கு ஆதரவாக ரஜினி வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் நீக்கம்
கொரோனா பரவுவதல் குறித்து தவறான தகவல்களை கூறியதாக நடிகர் ரஜினியின் வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவாக நடிகர் ரஜினி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இந்தியாவில் கொரோனா 2வது நிலையில் உள்ளதாகவும் அது மூன்றாவது நிலைக்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேரம் ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்திருந்தார்.
இத்தாலியில் இதே போன்று கொரோனா 2வது நிலையில் இருந்த போது அரசுகள் கொடுத்த அறிவுறுத்தல்களை அந்நாட்டு மக்கள் ஏற்காதது தான் அங்கு அதிகமான பாதிப்பு ஏற்பட காரணம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3வது நிலைக்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேர ஊரடங்கு என்று ரஜினி கூறியது உண்மைக்கு மாறான தகவல் என்று புகார்கள் எழுந்தன.
மேலும் பலர், ரஜினி வீடியோ தவறான தகவல்களை பரப்புவதாக ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து ரஜினியின் வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. சுமார் 57 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட ரஜினியின் பக்கத்தில் இருந்து வீடியோ அகற்றப்பட்டுள்ளது ட்விட்டரில் விவாதப் பொருள் ஆகியுள்ளது.
Comments