நீரின்றி அமையாது உலகு !
ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் நமது எதிர்கால சந்ததியினருக்கு சேமிக்க வேண்டியது நமது கடமை. உலக தண்ணீர் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் குடிநீரின் தேவையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
இயற்கை தனது கருணையை மழையாய்ப் பொழிகின்றது. மழை நீர் உணவுப் பொருட்களை உண்டாக்கி, உண்பவர்க்கு உணவாகவும் அமைகிறது என்கிறார் வள்ளுவர்.
மழை நீர் சாக்கடையிலும் கலக்கிறது நதிகளிலும் நிறைகிறது. செம்புலப் பெயல் மழை நீரை சேமித்து கோடைக்காலங்களில் குடிநீராக்கிக் கொள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. புதிய வீடுகள் அனைத்தும் மழைநீர் சேமிப்புக்கான வசதிகளுடன் கட்டப்படுகின்றன. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கவும் நமது குழந்தைகள், எதிர்கால சந்ததியினருக்காக சேமித்து வைக்கவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் கிடைக்காத கொடுங்காலங்கள் எப்படியிருக்கும் என்பதை இலக்கியம் வாயிலாகவும் திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குளங்கள், ஏரிகள் ,ஆறுகளை அவ்வப்போது தூர் வாரினால் தண்ணீரை சேமிக்க முடியும். பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக மூடன் உப்புநீரைக் குடிப்பான் என்று பாரதியார் சாடினார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, கோடையின் கடும் வறட்சி , சுற்றுச்சூழல் பாதிப்பால் மழை குறைவது போன்ற காரணங்களால் காவிரி, வைகை போன்ற ஆறுகள் பல மாதங்களுக்கு நீரின்றி வறண்ட பாலைகளாக காட்சியளிக்கின்றன.
ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் வரத்து, வீராணம் ஏரி நீர், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவற்றால் சென்னை மக்களுக்கு ஓரளவு தாகம் தீர்கின்றது. தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவது, சேமிப்பது, நீராதாரங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மட்டும் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல.
ஒவ்வொரு மனிதருக்கும் அந்த பொறுப்பு உள்ளது. கடுமையான தாகத்தில் தண்ணீரை அள்ளிக் குடிக்கும் போது நமது எதிர்கால சந்ததிக்கும் இந்த தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதே மனித மாண்பு...
Comments