108ம்., கொரோனா kit-ம்..!

0 5001

கொரோனா வைரஸ் கிருமி அச்சுறுத்தலால் உலகமே பீதியில் ஆழ்ந்திருக்கும் வேளையில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணி அளப்பரியது. அந்த வகையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் சேவை குறித்த செய்தித் தொகுப்பை இப்போது காணலாம்.

எந்த நேரத்திலும், எந்த விதமான காலச் சூழ்நிலையிலும் எந்த இடத்தில் அவசரம் என்று அழைப்பு வந்தால் முடிந்த அளவிற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும், காப்பாற்றுவதிலும் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் ஊழியர்களின் பணி மெச்சத்தக்கது. இந்தவகையில் தற்போது அவர்கள் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உண்ண நேரமின்றி, உறங்க வழியின்றி செயல்பட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் சுமார் 945 வாகனங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொரோனா தொற்று காணப்பட்டால் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ அல்லது மாவட்ட அரசு தலைமை மருத்துவனைக்கு 10 முதல் 12 நிமிடங்களில் அழைத்துச் செல்கின்றனர். 

கொரோனா தொற்று இவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் நீண்ட அங்கி, ஷூ, முகக்கவசம், கண் கண்ணாடி, கையுறைகள் மற்றும் தலைக்கவசங்கள் போன்றவை அரசால் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி கொரோனா குறித்த அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட நிலையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களை நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில் அழைத்துச் சென்ற நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 25 பேர் வரை அழைத்துச் செல்வதாக கூறுகிறார் 108 ஊழியரான பிரபு.

கொரோனா தொற்றுடன் இருப்பவர்களை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும் சாலையில் செல்பவர்களையும் மனதில் கொண்டு ஆம்புலன்சை இயக்குவது சவாலான விஷயமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிவானந்தம்.

கெரோனா பயன்பாட்டுக்காக ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பே பயன்பாட்டுக்கு வருகிறது. அதுவரை அந்த வாகனம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட பயணத்திற்கு தயாராகிறது. அதுவரை மாற்று வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments