ஹெல்மெட் போடலையா ? வந்து கைய கழுவுங்க..! அவர்னஸ் ஆய்வாளர்
தலைகவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டிப்பிடித்து அபராதம் வசூல் செய்யும் அதிகாரிகளுக்கு மத்தியில், தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகளை கைகழுவ செய்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பழனியில் நடந்துள்ளது. மக்களின் இதயங்களை வென்ற பெண் காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியை சர்வதேச குற்றவாளியை போல விரட்டிச்சென்று தடியால் அடித்து மண்டையை உடைப்பது..! அவசரமாக செல்பவர்களை மறித்து பாக்கெட்டில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் அபராதம் என வசூலித்துக் கொள்வது..!
இப்படிப்பட்ட நடவடிக்கையால் தங்களை ஸ்ட்ரிக்ட்டான போலீசாக காட்டிக் கொள்ளும் ஆய்வாளர்கள் மத்தியில் பழனி பெண் காவல் ஆய்வாளர் முத்து லெட்சுமி சற்று வித்தியாசமானவர்..! வாகன சோதனையின் போது ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டும் நபர்களை அழைத்து அறிவுரை வழங்குவது, ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவரது வழக்கம்.
அந்தவகையில் தற்போதைய அதிதீவிர பிரச்சனையான கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விபத்தின் போது உயிரிழப்பு ஏற்படும், அதுபோல தான் முறையான சானிடேசர் ஊற்றி கையை நன்றாக கழுவாமல் சுற்றினால் கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டு உயிரை இழக்கும் அபாய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கும் காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி அனைவரையும் 20 நொடிகளுக்கு குறையாமல் கையை கழுவிவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதில் ஒரு வாகன ஓட்டி அபராதம் இல்லை என்றதும், ரொம்ப நல்ல பிள்ளை போல கையை அதி தீவிரமாக தேய்ச்சி தேய்த்து கழுவ, வீட்டிற்குள் செல்லும் முன்பாகவும் பழங்கால முறைப்படி இது போல கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தள்ளி தள்ளி நில்லுங்கள், மக்கள் ஊரடங்கு அன்று சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே படுத்து தூங்குங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றும் தினமும் 10 முறையாவது நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
முத்துலெட்சுமியின் இந்த முத்தான நடவடிக்கையை அப்பகுதிமக்கள் பாராட்டிச் சென்றனர். காவல்துறையில் இது போன்ற சமூக அக்கறை கொண்ட காவல் அதிகாரிகளும் இருக்கின்றார்கள் என்பதற்கு ஆய்வாளர் முத்துலெட்சுமியும் ஒரு சிறந்த உதாரணம்..!
Comments