ஓரம்போ… ஓரம்போ வேப்பில்லை வண்டி வருது..! கொரோனாவ விரட்ட வில்லேஜ் விஞ்ஞானம்

0 9305

கோவை மற்றும் தஞ்சையில் கொரோனா வைரஸ் கிருமியை தடுப்பதற்காக அரசு பேருந்துகளில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. சுத்தமில்லா பேருந்தில் மஞ்சள் தெளித்து வேப்பில்லை கட்டினால் கொரோனாவை விரட்டலாம் என நம்பும் வில்லேஜ் விஞ்ஞானிகளின் வினோத செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டுவிடகூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக அனைத்து அரசு பேருந்துகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

முறையாக சானிடைசர்களும் முககவசங்களும் வழங்கப்படாமல் இருப்பதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற முன் எச்சரிக்கையுடன் சில ஓட்டுனர்களும் நடத்துனர்களும் வாட்ஸ் ஆப்பில் வரும் தகவலை உண்மை என நம்பி இயற்கை மருத்துவ முறையில் வேப்பிலையை கையில் எடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் வழியாக அரியலூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றை வேப்பிலை அரணுக்குள் கொண்டு வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இயற்கை முறையில் பேருந்து இருக்கை பயணிகள் கைவைக்கும் இடம் என அனைத்திலும் மஞ்சள் தெளித்தனர். அந்த பேருந்தில் பயணித்த ஒரு சில பயணிகளும் முகத்தை மூடிக் கொண்டு முன் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.

இதற்கு ஒரு படி மேலாக கோவை காந்திபுரத்தில் இருந்து நாதகவுண்டன்புதூர் செல்லும் அரசு டவுன் பேருந்து, வேம்பு, துளசி, மஞ்சள் என குளியல் சோப்பில் உள்ள அத்தனை அயிட்டங்களையும் பசுமை தோரணமாக சுமந்தபடி சென்றது.

பேருந்து ஓட்டுனர் பாதுகாப்பாக முக கவசம் அணிந்திருந்தார். அழுக்கு படிந்த அந்த பேருந்து சுத்தப்படுத்த படாமல் இருந்தாலும் பேருந்துக்கு உள்ளே வேப்பிலை தோரணத்துடன் மஞ்சள் தெளிக்கப்பட்டிருந்தது. வேப்பிலையும், மஞ்சளும் கிருமி நாசினி என்பதால் தாங்களே யோசித்து இந்த முன் ஏற்பாடுகள் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை அறிந்து அரசு மருத்துவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வேப்பிலை, மஞ்சள், துளசி இவையாவும் இயற்கையில் அருமையான மருந்துவ குணம் கொண்டவை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இவற்றை மருந்தாக உட் கொள்ளும் போது மட்டுமே மனித உடலில் உள்ள சில சிறிய நோய்களுக்கு தீர்வுதரக் கூடியவை, அதே நேரத்தில் கொரோனா போன்ற கொடிய வைரஸ் 160 நாடுகளை கலங்கடித்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு என்ன மருந்து பயன்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகளே குழம்பி தவிக்கின்றன.

இந்த நிலையில் வேப்பிலை தோரணம் கட்டுவதால் கொரோனா வராது என்று நம்புவது அறியாமையின் உச்சம் என்றும், மஞ்சளை தண்ணீரில் கலந்து தெளிப்பதால் கொரோனா வைரஸ் சாகாது என்றும் மஞ்சள் பொடிதான் வீணாகும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழன் பெருமைக்குரியன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை அதே நேரத்தில் எல்லா நோய்க்கும் தமிழன் மருந்து கண்டு பிடித்துத்துள்ளான் என்று வாட்ஸ் ஆப்பில் பரப்பபடும் வதந்தியை நம்பினால், இன்று இத்தாலி மெத்தனத்தால் இடியாப்பசிக்கலில் சிக்கி தவிப்பதை போல நாமும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்க நேரிடும் என்பதால் முறையான முன் எச்சரிக்கைகளை பின் பற்றுவதே அனைவருக்கும் சால சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்..!

அதே நேரத்தில் தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் முழுமையாக கிருமி நாசினி தெளித்து, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments