நாளை சுய ஊரடங்கு…என்னென்ன கிடைக்கும், கிடைக்காது ?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் மக்கள் நாளை ஒருநாள் ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதனை ஏற்று அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கிற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.
இதனால் நாளை தங்கள் அன்றாட தேவைளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்பது குறித்து பல தொடர் சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளன.
போக்குவரத்தை பொறுத்தவரை நாளை அரசு பேருந்துகள் இயங்காது, தனியார் பேருந்துகளையும் இயக்க வேண்டாம் என அரசு தரப்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல புறநகர் ரயில்கள் மட்டும் குறைவாக இயங்கும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் இயங்காது. அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் முன்பதிவு செய்தவர்களின் கட்டண தொகை முழுவதும் திருப்பி செலுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், ஆம்புலன்ஸ், காய்கறி, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். தமிழகத்தில் மளிகை கடைகள், காய்கறி, ஹோட்டல், என எதுவும் இயங்காது என சம்பந்தப்பட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஒருவேளை உங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டால் வீடுகளுக்கு சென்று வழங்கலாம் என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும், டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
காய்கறி கடைகள், பால் விநியோகிக்கும் கடைகள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் நாளை வழக்கம் போல இயங்கும்.
Comments