கொரோனா பீதி.! கோடிக்கணக்கான கைகளில் புழங்கும் கோடிகள்.. உஷாராக இருப்பது எப்படி.?
நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தில் உள்ள நிலையில், மக்கள் எந்த பொருளை பார்த்தாலும் தொடுவதற்கு ஒரு கணமாவது யோசிக்கின்றனர். அதில் முக்கியமானவை பணமும், நாணயங்களும்.
4 கட்டங்களை கொண்ட கொரோனா, இரண்டாவது கட்டத்திலிருந்து சமூக தொற்று எனப்படும் மூன்றாம் கட்டத்திற்கு போய்விட கூடிய அபாய சூழலில் தற்போது நாம் இருக்கிறோம். அந்த கட்டத்திற்கு சென்று விட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது மிக பெரிய சவாலாகி விடும். இதற்காக தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எந்த பொருட்களிலும் கொரோனா தொற்றியிருக்க கூடிய அபாயம் உள்ளது. கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவுவது மட்டுமின்றி, பல பொருட்களை தொடும் போதும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில் அன்றாடம் பயன்படுத்தும் பண நோட்டுகள் மற்றும் நாணயங்களை கையாளும் போது அதன் மூலம் கொரோனா பரவி தங்களிடம் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் பலரிடையே எழுந்துள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் கைகளில் புழங்கும் இவற்றை எந்த சூழலிலும் தவிர்க்கவே முடியாது. இருப்பினும் இவற்றை பயன்படுத்தும் போது கிளவுஸ்களை போட்டு கொள்ளலாம். எல்லோராலும் கையுறைகளை போட்டு கொள்ளுவது சாத்தியம் இல்லை. எனவே பணம் மற்றும் நாணயங்களை கையாண்ட பின்னர், முகத்தின் எந்த பாகங்கள் மீதும் கை வைக்காமல் சோப்பு அல்லது சானிட்டைசர் கொண்டு கைகளை நன்கு கழுவி விட வேண்டும்.
அதே போல ரூபாய் நோட்டுகளை அதிகமாக கையாளும் போது அவற்றை எண்ணும் சூழல் ஏற்பட்டால், எச்சில் தொட்டு எண்ணுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட மிக எச்சரிக்கையாக நாம் செய்ய வேண்டியது குழந்தைகளிடம் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை தருவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இப்போது பெட்டிக்கடை முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை டிஜிட்டல் பேமெண்ட் செய்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பணப்பரிமாற்றத்தை குறைத்து கொண்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் அச்சத்திலிருந்து விடுபடலாம்.
Comments