மார்ச் 22 சுய ஊரடங்கு...காரணம், நன்மைகள் என்ன ?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் நோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாளை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியேவர வேண்டாம் எனவும், அந்த நாள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவு போட்டால் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்து வருகின்றன. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு போடுவதன் மூலம் எதிர்காலங்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் தற்காத்து கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஏனெனில் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் மாகாணத்தில் இதேபோன்று இரண்டு மாதங்கள் லாக்டவுன் முறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது வீடுகளில் தங்கியிருந்த மக்களில் யாருக்கெல்லாம் கொரோனா தாக்கப்பட்டது என்பது விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அப்போது நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்காணிக்க இந்த ஒத்திகை ஒரு சோதனை களமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் பட்சத்தில் நாடு எதிர் கொள்ளும் புதிய சவால்களை சமாளிக்க இது போன்ற ஊரடங்குகளை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மிரட்டல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்களிடம் விழிப்புணர்வு பணிகளை முடுக்கி விட்டு, தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தவே ஞாயிற்றுக்கிழமை, சுய ஊரடங்கை கடை பிடிக்க நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது
எனவே நாளை நடக்கப்போகும் சுய ஊரடங்கிற்கு மக்கள் அனைவரும் சரியான ஒத்துழைப்பை அளித்து தங்களின் அத்தியாவசிய தேவைகளன்றி வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க உறுதி்யேற்போம்.
Comments